உலக வலு தூக்கும் சாம்பியன் உயிரை பலி‍‍யெடுத்த கோர விபத்து

அரியானா மாநிலம், பானிபட் நகரில் நடைபெறும் தேசிய வலு தூக்கும் போட்டியில் கலந்துகொள்வதற்காக உலக சாம்பியன் சக்ஷாம் யாதவ் மற்றும் திகாம் சந்த், சவுரவ், ஆகாஷ், ஹரிஷ் ராய், ரோகித் ஆகிய 6 வீரர்கள் ஒரு காரில் டெல்லியில் இருந்து சென்று கொண்டிருந்தனர். 6 பேரும் டெல்லியை சேர்ந்தவர்கள் ஆவர்.

அந்த கார் அதிகாலை டெல்லி–சண்டிகார் நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தது. வடமேற்கு டெல்லி அருகே அலிப்பூர் போலீஸ் நிலைய எல்லைப் பகுதியில் அதிகாலை 4 மணிக்கு சென்றபோது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதியது. பின்னர் சாலையோரத்தில் இருந்த ஒரு கம்பத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரில் இருந்த 6 வீரர்களும் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். உடனடியாக 6 பேரும் மீட்கப்பட்டு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் திகாம் சந்த், சவுரவ், ஆகாஷ், ஹரிஷ் ராய் ஆகிய 4 வீரர்கள் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

சக்ஷாம் யாதவ், ரோகித் ஆகியோர் படுகாயத்துடன் கவலைக்கிடமான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். தலையில் பலத்த காயம் அடைந்த சக்ஷாம் யாதவின் நிலைமை மோசம் அடைந்ததால் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு நேற்று மாலை 6.40 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக அவர் உயிர் இழந்தார்.

2017–ம் ஆண்டு மாஸ்கோ நகரில் நடந்த வலு தூக்கும் போட்டியில் சக்ஷாம் யாதவ் உலக சாம்பியன் பட்டம் வென்றவர் ஆவார்.

விபத்து பற்றி டெல்லி போலீசார் கூறுகையில், ‘‘தேசிய வலு தூக்கும் போட்டியில் பங்கேற்க சென்ற 6 வீரர்களில் ஒருவரான ரோகித்துக்கு இன்று (அதாவது நேற்று) பிறந்த நாள் ஆகும். இதை 6 பேரும் கொண்டாடியும் உள்ளனர். அப்போதுதான் விபத்தில் சிக்கிக்கொண்டனர். விபத்துக்கு உள்ளான காருக்குள் மதுபான பாட்டில்கள் கிடந்தன. எனவே, காரை ஓட்டியவர் மதுபோதையில் இருந்தாரா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *