இலங்கைக்கு 410 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், நான்காவது நாளான இன்று, 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில், 246 ஓட்டங்களைப் பெற்ற இந்திய அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.

கடந்த 2 ஆம் திகதி டெல்லியில் ஆரம்பமான இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சார்பில், அதிரடியாக ஆடிய தலைவர் விராட் கோலி 243 ஓட்டங்களையும், முரளி விஜய் 155 ஓட்டங்களையும் விளாசினர்.

இந்தநிலையில், ஏழு விக்கெட்டுக்களை இழந்து 536 ஓட்டங்களைக் குவித்த நிலையில், தனது முதலாவது இன்னிங்ஸை இடைநிறுத்தி, இலங்கைக்கு துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை வழங்கியது இந்தியா.

இதற்கமைய, இலங்கை சார்பில் களமிறங்கிய ஆரம்ப வீரரான திமுத் கருணாரத்ன ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தார்.

மேலும், தில்ருவன் பெரேரா 42 ஓட்டங்களையும், தனஞ்சயடி சில்வா ஒரு ஒட்டத்தினையும் பெற்ற நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மெத்தியூஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் நிதானமாக ஆடி இலங்கையை வலுவான நிலைக்கு அழைத்துச் சென்றனர்.

இதன்படி மெத்தியூஸ் 111 ஓட்டங்களையும் சந்திமால் 164 ஓட்டங்களையும் பெற்றிருந்த போது, ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து வந்த வீரர்கள் எவரும் அவ்வளவாக பிரகாசிக்காத நிலையில் 373 ஓட்டங்களை மட்டுமே பெற்ற இலங்கை அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

எனவே, 163 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கும் இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாட ஆரம்பித்தது.

இதற்கமைய இந்தியா 246 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களை இழந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை இடைநிறுத்தியுள்ளது.

எனவே 410 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள இலங்கை அணி சற்றுமுன் வரை ஒரு விக்கெட்டினை இழந்து 14 ஓட்டங்களை பெற்றநிலையில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *